யுத்தத்தின் பின்னர் நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணவும், அபிவிருத்தியை நிலைநாட்டவும் அரசியல் யாப்பு மாற்றம் காலத்தின் தேவையாக உள்ளதென வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று காலை கண்டிக்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர், மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவே ஸ்ரீ சிந்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து அரசியல் யாப்பு சீர்திருத்த ஆவணத்தை கையளித்து ஆசி பெற்றார்.
ஆவணத்தைக் கையளித்து தொடர்ந்தும் உரையாற்றிய அவர், முப்படைகளுக்கும் கட்டளையிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. எனினும் பொலிஸ் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. ஜனாதிபதிக்கு பொலிஸ் அதிகாரம் மிகவும் அவசியம். யாப்பு சீர்திருத்தத்தால் சுயாதீன ஆணைக்குழுவிற்கு பாதிப்பு ஏற்படாது. ஜனாதிபதியின் பதவி காலத்தினை நீடிப்பதற்கே அரசியல் மாற்றம் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கே யாப்பு சீர்திருத்தம் என வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது உரையாற்றிய மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவே ஸ்ரீ சிந்தார்த்த சுமங்கள தேரர் ஆவணங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்வியை மாத்திரம் கேட்டுள்ளார். தொடர்ந்து தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜீ.எல்.பீரிஸ் அஸ்கிரிய மாகாநாயக்க உருகம ஸ்ரீ புத்தரஹித்த தேரரை சந்தித்து யாப்பு சீர்திருத்த ஆவணங்களைக் கையளித்தார்.
