செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இலங்கை அகதிகளுக்கு ஓய்வூதியம் - ஜெயலலிதா

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கும் நீடிக்கப்படும் என தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்துள்ளார்.

இதனை செயல்படுத்தும் வகையில் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்த முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்கள் மாதந்தோறும் இந்தியன் ரூபா 1,000 ஓய்வூதியமாக பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழர்களின் நலனில் மத்திய அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தவில்லை. இதனால் அங்குள்ளவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக ஆர்.எஸ்.எஸ். வருகிற 13ம் திகதி முதல் 20ம் திகதிவரை தமிழ்நாடு முழுவதும் நிதி திரட்டுகிறது.

இதற்கு பாரதீய ஜனதா உதவும். இலங்கை இராணுவத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து பாரதீய ஜனதா தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் வருகிற 7ம் திகதி இராமேஸ்வரத்தில் நடைபெறும் கடல் முற்றுகை போராட்டத்தில் பாரதீய ஜனதாவினர் திரளானவர்கள் கலந்து கொள்கிறார்கள் என கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.