புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவராகக் கருதப்படும் இலங்கை நபரொருவர் இராமேஸ்வரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் தீபன் (பிரதீபன்). 34 வயதான இவர், 2005 இல் விமானம் மூலம், தமிழகம் வந்து அகதிகள் முகாமில் தங்கி, பெயின்டராக வேலை செய்தார். அப்போது புலிகள் இயக்கத்துக்கு தேவையான பொருட்களை, இலங்கைக்கு அனுப்பும் வேலையிலும் இவர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2007இல் புலிகளுக்கு கொண்டு செல்வதற்காக, திருச்சியிலிருந்து பால்ரஸ் குண்டுகளை கடத்த முயன்ற போது, "கியூ' பிரிவு பொலிஸாரால் கைது செய்ய ப் பட்டு, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். 2010 இல் சிறப்பு முகாமிற்குள் நடந்த கலவரத்தில் ஈடுபட்டதற்காக, இவர் மீது வழக்கு பதிவானது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பெப்ரவரியில் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட இவர், மற்ற முகாமில் தங்கியுள்ள அகதிகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு அனுப்பி வந்துள்ளார்.
சமீபத்தில் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு படகில் அகதிகளை அனுப்பிய மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது பிரதீபன் மட்டும் தப்பிவிட்டார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மண்டபம் முகாமில், இலங்கை செல்வதற்கான முயற்சியில் இருந்த பிரதீபனை இராமேஸ்வரம் கோயில் பொலிஸார் கைது செய்தனர்.
