சனி, 17 செப்டம்பர், 2011

யாழ். கிளாலி கிராம சேவையாளர் பிரிவு மக்களை மீளக் குடியமர்த்தும் வேலைகள்

இடம்பெயர்ந்து வசித்து வரும் கிளாலி (K/95) கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்களை எதிர்வரும் 26 ஆம் திகதி சொந்த இடங்களில் மீள்குடியமர அனுமதிக்கவுள்ளதாக பச்சிலைப்பள்ளி உதவி அரசாங்க அதிபர் த. முகுந்தன் தெரிவித்தார். இவர்கள் 1990 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :-

கிளாலி கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட றோமன் கத்தோலிக்க வித்தியாலய மேற்குப் பகுதி நிலங்களில் கண்ணிவெடிகள், வெடிக்காத வெடிபொருட்கள் அகற்றப்பட்டதற்கான அறிக்கை கிடைத்ததற்கு அமைய அப்பகுதி மக்களை எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10 மணிக்கு மீள்குடியமர்த்தத் தீர்மானித்துள்ளோம்.

ஆனால் கிளாலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு கிழக்குப் பக்கமாக உள்ள நிலங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதற்கான அறிக்கை கிடைக்கப்பெறவில்லை. அப் பிரதேசத்திலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்பு மக்களை மீள்குடியமர்த்துவது என தீர்மானித்துள்ளோம்.

கிளாலிப் பகுதியின் கடற்கரையை அண்டிய பகுதி மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வசித்து வருகின்றனர். ஏனையோர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப் பகுதி மக்களை மீளக்குடியமர்த்தும் பொழுது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய விவசாய உபகரணங்கள், கூரைத் தகடுகள், சீமெந்து என்பனவற்றினையும் நிதி உதவிகளையும் வழங்கவுள்ளோம்.

எதிர்வரும் 26 ஆம் திகதி 65 குடும்பத்தினரை மீளக்குடியமர்த்தத் தீர்மானித்துள்ளோம்.

இவர்கள் அனைவரும் இடம்பெயர்ந்து வாடகை வீடுகளிலும் நண்பர்கள், உறவினர்களின் வீடகளிலும் வசித்து வருபவர்கள் என்றார்.