வெள்ளி, 16 செப்டம்பர், 2011

டெங்கு! மேல் கொத்மலை திட்டப் பணிப்பாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவென வீடுகள் உடைக்கப்பட்டு நிர்க்கதியான மக்களுக்கு புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளுள் 20 சதவீதமானவற்றுள் டெங்கு நுளம்பு பரவும் சூழல் காணப்படுவதால் மேல் கொத்மலை திட்டப் பணிப்பாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேல் கொத்மலை திட்டத்தின் கீழ் புதிதாக 419 வீடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வீடுகள் உரிமையாளர்களிடம் சட்ட ரீதியாக ஒப்படைக்கப்படவில்லை என்பதால் மேல் கொத்மலை திட்டப் பணிப்பாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ததாக தலவாக்கலை பொது மக்கள் சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.மெதவல குறிப்பிட்டார்.

குறித்த வழக்கு நுவரெலிய நீதவான் சமன் காரியவசம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் குறித்த வீடுகளில் காணப்படும் சுகாதார குறைப்பாடுகளை ஆராய்ந்து அவற்றை சரிசெய்து அச்சூழலை சுத்தப்படுத்திக் கொடுக்குமாறு நுவரெலிய நீதவான் மேல் கொத்மலை திட்டப் பணிப்பாளக்குக்கு உத்தரவிட்டார்.

மேல் கொத்மலை திட்டத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு தலவாக்கலை, குமாரகம, ரன்மில்லகெலே, நானுஓயா தோட்டம் மற்றும் வோக்கஸ் ஆகிய பகுதிகளில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.