முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெனாண்டோ புள்ளேவை கொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தற்கொலை சந்தேகநபருக்கு தங்குமிட வசதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் மாதம் 19ம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சண்முகம் சூரியகுமார் என்ற சந்தேகநபர் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதோடு சட்ட மா அதிபர் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெனாண்டோ புள்ளேவை கொலை செய்ய வந்த விடுதலைப் புலி தற்கொலையாளியான முத்தையா சஷேந்திரன் என்ற நபருக்கு 2008ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தெஹிவளை பகுதியில் தங்குமிட வசதி செய்து கொடுத்ததாக சண்முகம் சூரியகுமார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சண்முகம் சூரியகுமார் குற்றம் இழைத்தவர் என சட்ட மா அதிபர் தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி குற்றப்பத்திரிகையை கையளிக்கவென சந்தேகநபரான சண்முகம் சூரியகுமாரை எதிர்வரும் மாதம் 19ம் திகதி நீதிமன்றிற்கு அழைத்து வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
