அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதால் கொழும்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அவசரகாலசட்டம் நீக்கப்பட்ட நிலையில் நடத்தப்படவுள்ள தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வௌ்ளிக்கிழமை வரை 33 தேர்தல் வன்முறைச் சம்பவங்களே இடம்பெற்றுள்ளதாகவும் அச் சம்பவங்களும் சிறு சிறு சம்பவங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அனைவரும் கொழும்பு மாநகர சபை குறித்து அவதானித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், கொழும்பு நாட்டின் தலைநகரம் என்பதால் அதனை அரசாங்கத்திடமிருந்து விலக்கி அதனை நிர்வாகம் செய்ய வேறு எந்த அரசியல் கட்சிகளுக்கும் வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கொழும்பு மாநகர சபை தேர்தலில் வெற்றி பெற்று மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
