திங்கள், 9 ஜனவரி, 2012

இந்திய வீட்டுத்திட்டங்களின் தாமதம் இந்திய அரசாங்கத்தின் நன்மதிப்பைப் பாதிக்கின்றது

இந்திய வீட்டுத்திட்டம் அமைப்பதில் ஏற்படும் தடங்கல்களை நீக்குவதில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கிருஸ்ணா அதிக கவனம் செலுத்துவார் என யாழ்.இந்தியத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வுத்திட்டத்திலும் பார்க்க இந்திய வீட்டுத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள மாகாலிங்கம், இவ்வீட்டுத் திட்டங்கள் இந்திய நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வருகின்றது.

எண்ணிக்கையில் குறைந்தளவான வீடுகளே இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் 49 ஆயிரம் வீடுகள் 260 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் அமைப்பதற்கு 2010 நவம்பர் 27 இல் யாழ்ப்பாணம் அரியாலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கிருஸ்ணா மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் ஆகியோரினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இவ்வீட்டுத்திட்டங்களின் தாமதம் இந்திய அரசாங்கத்தின் நன்மதிப்பைப் பாதிக்கின்றது. எனவே, இவற்றைத் துரிதப்படுத்துவதற்காக இலங்கைக்கு வரும் வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இணைந்து நடவடிக்கைகளை எடுக்கவுள்ளன.

இவற்றை அமைப்பதை துரிதப்படுத்துவதற்கான வழிவகைக்கேற்ப பயனாளிகள் நேரடியாக வீடுகளை அமைப்பதற்கு தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

பயனாளிகள் வீடுகளை அமைக்கும்போது வேலை முன்னேற்றத்திற்கேற்ப இந்திய தூதரகத்தினால் வங்கி ஊடாக இவர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த அடிப்படையில் 38 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படுவதற்கும் 6 ஆயிரம் வீடுகள் பயனாளிகளால் அமைக்க முடியாத காரணத்தால் ஒப்பந்தகாரர் மூலம் அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வீடுகள் அமைக்கும் விடயத்தில் நீண்டகால அனுபவத்தைக் கொண்டிருக்கும் ஐ.நா நிறுவனமான யுனப்சின் திட்டமுகாமைத்துவ ஆலோசனையும் பெறப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் 9 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் அரியாலையில் கட்டப்பட்டுள்ள 30 வீடுகளே எதிர்வரும் 18ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சரால் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக யாழ்.இந்தியத் தூதுவர் எஸ். மகாலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.