பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறுவது குறித்து கதைக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்தால், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசுடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடும் இன்றி கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு பெயர் பரிந்துரை செய்யாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் எதிர்கட்சி உறுப்பினர்களை இடம்பெறச் செய்ய விரைவில் பாராளுமன்றில் அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நேற்று (30) தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அத தெரண செய்திப் பிரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வினவியபோதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் 1ம் திகதிக்குள் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு பெயர் பரிந்துரை செய்யுமாறும் அரசு கூறியபோதும், பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதும் பெயர் பரிந்துரை செய்வதாக கூட்டமைப்பு கூறியதற்கு அரசு இணங்கியதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி இருக்கையில் அரசு தனது கருத்தில் இருந்து மாறக் கூடாது எனவும் அரசு இணங்கிய பின் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு பெயர் பரிந்துரை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
தம்முடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பட்டிற்கு புறம்பாக செயற்பட வேண்டாம் என சுமந்திரன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
