திங்கள், 9 ஜனவரி, 2012

கள்ளத் தொடர்பால் பெற்ற குழந்தையை குழி தோண்டிப் புதைத்த தாய்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரிச்சல் 03ம் கிராமத்தில் பெற்ற குழந்தையை குழிதோண்டி புதைத்த பரிதாப சம்பவமொன்று நேற்று (08) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கள்ளத்தொடர்பு மூலம் உருவான இக்குழந்தை கடந்த டிசம்பர் 06ம் திகதி காலையில் பிறந்துள்ளது.

இக்குழந்தையினை குறித்த பெண்ணும் அவருடைய கள்ளம் காதலனும் இணைந்து வீட்டின் அருகிலுள்ள சுவர் ஓரமாக புதைத்துள்ளனா்.

பின்னர் தாய்க்கு ஏற்பட்ட இரத்தப் பெருக்கு காரணமாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கல்முனை அஷ்ரப் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலைக்கு இடமாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வெளியான சில தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அக்கிராம வாசிகள் சம்மாந்துறை பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸ் பரிசோதகர் கே.எம்.இப்றாஹிம் தலைமையிலான பொலிஸ் குழுவினரும், அம்பாறை சொக்கோ புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்ட நடவடிக்கையினால் நேற்று 1.30 மணியளவில் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உதுமாலெப்பை ஆமீனாஉம்மா (வயது -36) எனவும், அவருடைய கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபர் ஆதம்பாவா அலியார் சம்சுதீன் (வயது 55) எனவும் விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.

குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்