திங்கள், 9 ஜனவரி, 2012

பொகவந்தலாவைப் பிரதேசத்தில் தொழிலாளர்கள் பணி நிறுத்தம் : சம்பளம் பெற மறுப்பு

பொகவந்தலாவைப் பிரதேசத்திலுள்ள சில தோட்டங்களில் தொழிலாளர்களின் டிசம்பர் மாதச் சம்பளத்தில் தொழிலாளர்களுக்கு எவ்வித அறிவித்தலுமின்றி குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொகவந்தலாவைப் பிரதேசத்தில் சுமார் 4000 க்கும் மேற்பட்டோர் இன்று பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொட்டியாக்கலை தோட்டத்தின் 7 பிரிவுகளைச் சேர்ந்த 1800 தொழிலாளர்களும் பொகவான, பிரிட்வெல் தோட்டங்களில் சுமார் 1200 தொழிலாளர்களும் பொகவந்தலாவை, டின்சின் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 1000 தொழிலாளர்களும் இன்று திடீர் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இதுவரை காலமும் அடிப்படைச் சம்பளத்திற்காக பறித்து வந்த கொழுந்தின் அளவிலிருந்து இரண்டு கிலோ அல்லது மூன்று கிலோ கொழுந்தினை தோட்ட நிருவாகங்கள் தன்னிச்சையாக அதிகரித்து டிசம்பர் மாதச்சம்பளம் தயாரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிரப்புத் தெரிவித்தே பொகவந்தலாவைப் பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணி நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

இதே வேளை பொகவந்தலாவைத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று இந்தத் தோட்டத்தின் தொழிற்சாலை முன்னால் அமர்ந்திருந்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.

இந்தப்போராட்டம் தொடர்பாக சகல தொழிற்சங்கங்களின் தலைவர்களும் ஹட்டன் தொழிற்திணைக்கள காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கம் ,மலையகத் தொழிலாளர் முன்னணி, இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்பனவற்றின் பிரதிநிதிகளுக்கும் ஹட்டன் சிரேஸ்ட உதவி தொழில் ஆணையாளருக்கும் இன்று 9ஆம் திகதி இடம் பெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது இந்தப்போராட்டம் தொடர்பாக தோட்ட நிருவாகத்தினருக்கும் தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை ஒன்று நாளை 10ஆம் திகதி ஹட்டன் தொழில் ஆணையாளர் காரியாலயத்தில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டு.