ஞாயிறு, 8 ஜனவரி, 2012

நாடாளுமன்றத்தில் புதிய உள்ளூராட்சி சட்டமூலத்திற்கு ஜே.வி.பி. எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள உள்ளூராட்சி அதிகார சபைகள் (திருத்த) சட்டமூலத்தை ஜே.வி.பி. இன்று விமர்சித்தது.

இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டால், தற்போதுள்ள தேர்தல் அரசியல் பிரச்சினைகள் மேலும் தீவிரமாகும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.

தற்போதுள்ள தேர்தல் முறையில் மக்களின் ஜனநாயக தீர்ப்பு முறையாக பிரதிபலிக்கப்படவில்லை. எனினும் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு உத்தேச உள்ளூராட்சி அதிகாரசபைகள் (திருத்தச்) சட்டமூலம் தீர்வாகாது என அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

'தற்போது எந்தத் தேர்தல்காலத்திலும் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கு அச்சுறுத்தல்களும் தூண்டுதல்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே நாடாளுமன்றத்திலோ ஏனைய ஆட்சியதிகார சபைகளிலோ மக்களின் ஆணை பிரதிபலிக்கப்படுவதாக நாம் கூறமுடியாது.

பிரச்சினைகளுக்கான உண்மையான காரணத்தை தீர்ப்பதற்குப் பதிலாக, 17 ஆம் திகதி புதிய சட்டமூலமொன்றை அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரவுள்ளது' என அவர் கூறினார்.

புதிய சட்டமூலத்தின் கீழ் தேர்தலொன்றில் 51 சதவீத வாக்குகளைப் பெறும் கட்சியொன்று 70 சதவீத பிரதிநிதித்துவத்தைப் பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.