திங்கள், 6 பிப்ரவரி, 2012

ஐரோப்பாவெங்கும் நிலவும் கடும் பனிப் பொழிவால் போக்குவரத்துக்கள் பாதிப்பு; 200 பேர் பலி

ஐரோப்பாவெங்கும் நிலவும் கடும் பனியுடன் கூடிய குளிர்கால நிலையால் போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் புகையிரத சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுப் போக்குவரத்துகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

கடந்த பல தசாப்த காலங்களில் ஏற்பட்டிராத இந்த மோசமான பனிப் பொழிவால் 200 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் 30 சதவீதமான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் நகரிலுள்ள சிபோல் விமான நிலையத்தில் சேவைகள் தாமதமாயின.

பனிப் பொழிவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனில் குறைந்தது 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு -38 பாகை செல்சியஸ் அளவான குறைந்த வெப்ப நிலை நிலவுகிறது. அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்து தற்காலிக கூடாரங்களில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

-27 பாகை செல்சியஸ் அளவான வெப்ப நிலை நிலவும் போலந்தில் குறைந்தது 45 பேர் பலியாகியுள்ளனர்.

ரோமானியாவில் கடும் குளிரால் பலியானவர்கள் தொகை 28 ஆக உயர்ந்துள்ளது.

கடும் பனிப் பொழிவு காரணமாக பொஸ்னியா, லத்வியா, லிதுவேனியா, எஸ்தேனியா, பல்கேரியா, செக் குடியரசு, இத்தாலி, ஸ்லோவாக்கியா, பிரான்ஸ், ஒஸ்திரியா, கிறீஸ் ஆகிய நாடுகளிலும் உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. இத்தாலிய தலைநகரான ரோமில் கடந்த 25 வருட காலத்தில் இல்லாத மோசமான பனிப் பொழிவு இடம்பெற்றுள்ளது. வெனிஸிலுள்ள பல கால்வாய்கள் உறைய ஆரம்பித்துள்ளன.

பொஸ்னிய தலைநகர் சரஜீவோஸில் பனிப் பொழிவால் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததையடுத்து அங்கு அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மொன்ரேனேக்ரோ, சேர்பியா மற்றும் குரோஷியாவில் கடும் பனிப் பொழிவால் அனைத்து பிரதேசங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் பல பகுதிகளில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கடும் பனிப் பொழிவால் தெரு, புகையிரத மற்றும் விமானப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்டிராத மோசமான பனிப் பொழிவு லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் 30 சதவீத விமான சேவைகள் ரத்து