ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் : த.தே.கூட்டமைப்பு நிபந்தனையை அரசு நிராகரிப்பு

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விதித்த நிபந்தனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமது அங்கத்தவர்களை நியமிக்கப் போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தது. எனினும் இவ்விடயத்தில் நெகிழ்வுப்போக்குடன் செயற்படுமாறு த.தே.கூட்டமைப்புக்கு பலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த சில தினங்களில் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் உத்தியோகபூர்வமற்ற ரீதியில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இறுதியில் ஒரு நிபந்தனையுடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து ஆராய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம்மதம் தெரிவித்திருந்தது.

ஞாயிறு லங்காதீப பத்திரிகைக்கு தெரியவந்த தகவல்களின்படி, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கலந்துரையாடல்களுக்கு காலவரையறையொன்று அவசியம் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையாக இருந்தது. இது தொடர்பான காலஅட்வணை தயாரிக்கப்பட வேண்டும் என த.தே.கூட்டமைப்பு கூறியிருந்தது.

எனினும், மொத்த வாக்காளர்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற 4 சதவீத வாக்குகளைவிட அதிக சதவீத வாக்குகளைப் பெற்ற பல கட்சிகள் இருப்பதால் இக்கலந்துரையாடல்கள் முடிவடையும் காலத்தை முன்கூட்டியே கூறமுடியாதென்பது அரசாங்கத்தின் நிபந்தனையாக உள்ளது.