சனி, 4 பிப்ரவரி, 2012

புதியதோர் தேசத்தின் அபிவிருத்திக்கு கட்டியம் கூறும் வழிகள் திறக்கப்பட்டுள்ளன

புதியதோர் தேசத்தின் அபிவிருத்திக்கு கட்டியம் கூறும் வழிகள் திறக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சுதந்திரதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுதந்திரம் குறித்த உண்மையான மதிப்புணர்வுடன் 64 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடக் கிடைத்துள்ளமை எமது தேசத்தின் அதிர்ஷ்டமாகும். இன்று கம்பீரமாய்ப் பறக்கும் எமது தேசியக் கொடி புதியதோர் தேசத்திற்குக் கட்டியம் கூறுவதாயுள்ளது.

சுதந்திரப் பொருளாதாரத்திற்கான வழிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு சுபீட்சமான எதிர்காலத்திற்கான தேசத்தின் அபிலாஷைகளுக்கு அது தினம்தோறும் வலிமையூட்டிக் கொண்டிருக்கின்றது. வெளிச் சக்திகளுக்கு அடி பணியாது நாட்டினதும் தேசத்தினதும் கரிசனைக்குரிய பிரச்சினைகள் குறித்து சுயாதீனமாக முடிவெடுக்கின்ற சுதந்திரத்தை எமக்கு வழங்கியுள்ளது.

எமது தேசம் எம்மிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்திருக்கும் மிக முக்கியமான பொறுப்பு இதுவாகும் என நான் உறுதியாக நம்புகின்றேன். உன்னதமான சுதந்திரத்தின் உறுதியான ஒன்றிணைவைக் காண்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.

சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கான சந்தர்ப்பங்கள் விரிவாக்கப்படுகின்ற போதே நாட்டின் அடைவுகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நோக்கங்கள் எதிர்காலத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு சுதேச செயற்திட்டத்தின் ஊடாக தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாம் இனியும் தயங்கப் போவதில்லை.

அதீத பொறுமையுடன் நாடு எதிர்நோக்கிய பல்வேறு சவால்களை நாம் வெற்றிக் கொண்டுள்ளோம். நட்பு ரீதியான தொடர்புகளின் ஊடாக சர்வதேச சமூகத்துடன் பயனுறுதிமிக்க வகையில் பொருளாதார, அரசியல், பாதுகாப்பு, வர்த்தக மற்றும் கலாசார தொடர்புகளை கட்டியெழுப்பியுள்ளோம். முன்னெப்போதைப் பார்க்கிலும் நாம் மிகவும் அறிவுபூர்வமாகவும் நாட்டுப் பற்றுடனும் செயற்பட்டு இவற்றை பேணிப்பாதுகாக்க வேண்டும்.

அதே போன்று நாட்டை அதன் பெறுமான முறைமைகளை விருத்தி செய்து முன்னேற்ற பாதைக்குக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஒரு அமைதியான சூழலில் ஒரு சுபீட்சமான வாழ்க்கைக்கான வழியேற்படும்.

உயர் சுதந்திரத்திற்கான தேசத்தின் சவால்களை வெற்றிக் கொள்வதற்கு தமது உயிர்களைக் கொடுத்து உன்னத தியாகம் செய்த எல்லா நாட்டுப் பற்றுடையவர்களுக்கும் தேசத்தின் மதிப்பும் கெளரவமும் என்றும் உரித்தாகும்.

ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்.