யாழ்.மாவட்டத்தின் தற்போதய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளனர். இந்தக் கலந்துரையாடல் பலாலி படைத் தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாணத்தின் தற்போதய பாதுகாப்பு நிலைமைகள், மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண ஆளுநர் செயலகம் மற்றும் படையினர் இணைந்து செயற்படுத்தும் நண்டு வளர்ப்புத் திட்டம் ஆகியன தொடர்பில் கேட்டறிந்தனர்.
அத்துடன் யாழ் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு படையினரால் வீடுகள் அமைத்துக் கொடுக்கின்றமை, மீள்குடியேற்றப் பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை தொடர்பிலும் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவினால் விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது, முன்னாள் போராளிகள், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை சர்வதேச புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் ஆசிய பசுபிக் நாட்டிற்குரிய பிராந்திய முகாமையாளர் அன்ரு றெபேட் வுறூஸ், கொழும்பிற்கான பிரதிநிதி றிச்சாட் டென்சியர், அபிவிருத்தி நன்கொடை இணைப்பாளர் யுசுப்பி லொப்றேற் ஆகியோர் கலந்துகொண்டனர்.
