பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதற்காக போலி கடவுச்சீட்டுகளையும் அடையாள அட்டைகளையும் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் நால்வர் பிரித்தானிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வட்போர்ட் இயூஸ்டன் அவெனியூவைச் சேர்ந்த மொஹமட் ஹுஸைன், அஸ்லம் றியாஸ், மொஹமட் பயாஸ் ஆகியோரும் ஹரோவ் நபரைச் சேர்ந்த மொஹமட் இப்ராஹிம் என்பவருமே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.
ஹூஸைனின் முகவரிக்கு அனுப்பப்பட்ட, போலி கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகள் கொண்ட பொதியொன்றை லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனையிட்டதன் மூலம் இவர்களின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
குறித்த முகவரியை சோதனையிட்ட பிரித்தானிய எல்லை முகவரக அதிகாரிகள் அங்கு றியாஸ், பயாஸ், இப்ராஹிம் ஆகிய பெயர்களில் போலி ஆவணங்களைக் கண்டுபிடித்தனர்.
ஹுஸைன், றியாஸ், இப்ராஹிம் ஆகியோர் விஸா காலாவதியானபின் பிரிட்டனில் தங்கியிருந்ததாக பிரித்தானிய எல்லை முகவரகத்தினர் தெரிவித்துள்ளனர். பயாஸ் கைது செய்யப்பட்டபோது அவர் செல்லுபடியான மாணவர் விஸாவை வைத்திருந்தார்.
