வியாழன், 2 பிப்ரவரி, 2012

உ/த வெட்டுப்புள்ளி சிக்கல்: பரீட்சைகள் ஆணையாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் கையாளப்பட்ட வெட்டுப்புள்ளி திட்டத்தை இரத்து செய்து அதனை மீண்டும் தயாரிக்கும்படி உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர், மாணவிகள் சிலர் இணைந்து குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

வெட்டுப்புள்ளி கணிப்பீட்டின்போது ஏற்பட்ட குளறுபடிகளால் கல்வித்துறையில் தற்போது பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதென அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனால் வெட்டுப்புள்ளி கணிப்பீட்டுத் திட்டத்தை இரத்து செய்து புதிய பெறுபேறுகளை வெளியிடுமாறு மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனு மீதான விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் மனுவில் பிரதிவாதிகளாகக் கூறப்பட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இதன்படி, மனு மீதான விசாரணை எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறும் என நீதிபதிகள் குழு அறிவித்தது.