வெள்ளி, 30 மார்ச், 2012

ஜெனீவா தீர்மானம் குறித்த அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு

ஜெனீவா தீர்மானம் தொடர்பாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில்  இன்று அறிவித்த, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ், எந்த நேரத்திலும் எந்த வெளிநாட்டுத் தலையீட்டையும் இலங்கை அனுமதிக்காது எனத் தெரிவித்தார். இவ்விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தனது கருத்தானது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தெனவும் அவர் கூறினார். அமைச்சரின் கருத்தானதுஅரசாங்கத்தின் கருத்தா என எதிர்க்கட்சியினர் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினர்.

கூட்டு அர்ப்பணிப்புடனான செயற்பாடு காரணமாக ஜெனீவாவில் 11 நாடுகள் இலங்கைக்கு சாதகமாக வாக்களித்தன எனவும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடொன்றைச் சேர்ந்த பிரதிநிதியொருவர் தன்னுடன் உரையாடுகையில், அந்நாடு இத்தீர்மானத்திற்கு எதிரானது எனவும் ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நிலைப்பாடு காரணமாக தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டியேற்பட்ட தெரிவித்ததாகவும் அமைச்சர் பீரிஸ் கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை குறித்த எதிர்மறையான பார்வைகள் தற்போது எழுந்துள்ளதாகவும்இப்பேரவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காகூட கருதுவதாகவும் அவர் கூறினார்.

ஜெனீவா தீர்மானம் குறித்து அமைச்சர்கள் முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுவது குறித்து ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார். ஜெனீவா விவகாரம் தொடர்பாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்த கருத்து அரசாங்கத்தின் கருத்தல்ல என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியமை குறித்தே தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியிருந்தார்.