திங்கள், 3 செப்டம்பர், 2012

தமிழக மீனவர்கள் 28 பேர் விசாரணைக்குப் பின் விடுதலை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை பிடித்துச் சென்ற இலங்கை கடற்படை விசாரணைக்குப் பிறகு அனைவரையும் விடுதலை செய்துள்ளது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சாமிநாதன், சுப்பிரமணியன், சசிக்குமார், சிங்காரவேல் ஆகியோருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 23-ம் திகதி 28 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

அவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த ஒரு வாரமாக மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த இலங்கை கடற்படை கப்பலில் இருந்தோர், எல்லை தாண்டி வந்ததாக கூறி படகுகளில் இருந்த மீனவர்களைத் தாக்கினர்.
பின்னர் படகுகளில் இருந்த 28 மீனவர்களையும் கைது செய்து மன்னாருக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்பு அனைவரையும் எச்சரிக்கை செய்து விடுதலை செய்தனர். கடத்தப்பட்ட மீனவர்கள் அனைவரும் நேற்று கரை திரும்பினர்.

(தஸ்ட் தமிழ்)