சனி, 1 செப்டம்பர், 2012

தபால் மூலம் வாக்களிப்பதற்கு தவறியோருக்கு மீண்டும் சந்தர்ப்பம்

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக் கான தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்து வாக்களிக்காதவர்கள் தமது சேவை நிலையம் அமைந்திருக்கும் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்குச் சென்று வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.   மூன்று மாகாண சபைக ளுக்குமான தபால்மூல வாக்க ளிப்பு கடந்த 27 ஆம், 28 ஆம் திகதிக ளில் நடைபெற்றன.

இத்தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்து வாக்களிக்காதவர்கள் மீண்டும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் தமது சேவை நிலையம் அமைந்திருக்கும் மாவட்டத்தின் தேர்தல் அலுவலகத்துக்குச் சென்று அங்கு வாக்களிக்க முடியும். எதிர்வரும் 6 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முன்னர் இவர்கள் இங்கு தமது வாக்குகளை அளிக்க முடியும் என அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்து வாக்களிக்க முடியாது போனவர்கள் இக்காலப் பகுதிக்குள் வாக்களிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்த ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 80 பேரில் 19 ஆயிரத்து 291 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஒரு இலட்சத்து 789 பேர் தபால்மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.