அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகலவிற்கு எதிராக நேற்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி, அக்கரைப்பற்று அமைப்பாளர் ஹனீபா மதனி, கிழக்கு மாகாண சபை வேட்பாளர் எம்.தவம் ஆகியோர் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் மற்றும் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அமைச்சர் அதாவுல்லாவிற்கு ஆதரவாக, மிகவும் பக்க சார்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகல செயற்பட்டு வருகின்றார் என்பதை சுட்டிக்காட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
அவரது பக்க சார்பான நடவடிக்கை காரணமாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரசார நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகள் தொடர்பில் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.
இது தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகலவிற்கு எதிராக பல முறைப்பாடுகளை மேற்கொண்ட போதிலும் பொலிஸ் மா அதிபரினால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அத்துடன், கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகானங்கள் அக்கரைப்பற்றில் வைத்து தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகலவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் எமது கட்சியின் வேட்பாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க கோரியும் இதுவரை வழங்கப்பட்டவில்லை.
இதனால் இவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் வியாழக்கிழமை இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
(அத தெரண - தமிழ்)