சனி, 1 செப்டம்பர், 2012

தாய் - மகனை கடத்தி கப்பம் கோரிய கணவன் - மனைவி கைது

யாழில் கப்பம் கேட்டு தாயையும் அவரது இரண்டு வயது மகனையும் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று (01) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

குறித்த இருவரும் யாழ்ப்பாணம் பற்றிக்ஸ் கல்லூரி வீதி அருகாமையில் வைத்து கடத்தப்பட்டதாகவும் பணத்திற்காகவே இக்கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென அவர் கூறினார்.

இவ்விடயம் தொடர்பாக யாழ். பொலிஸ் புலன் விசாரணைகளை மேற்கொண்டு கணவன் - மனைவி ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் தாயையும் மகனையும் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கப்பம் கேட்டு கடத்திய இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.