சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று படகு கோளாறு காரணமாக மீண்டும் கரைக்குத் திரும்பி காட்டில் மறைந்திருந்த சிலர் திஸ்ஸமகாராம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (08) இரவு 9 அளவில் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து திஸ்ஸமகாராம பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளனர்.
ஆமதுவ கடற்பரப்பில் மிதந்துக் கொண்டிருந்த ரோலர் படகொன்றை மீட்ட பொலிஸார் அருகில் உள்ள காட்டில் மறைந்திருந்த சிலரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 10 சிங்களவர்களும் 7 தமிழர்களும் ஒரு முஸ்லிம் நபரும் அடங்குவர்.
இவர்கள் கடந்த 2012-08-15ம் திகதி ஹுங்கம - ரெக்கவ பிரதேச கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
மேலும் விசாரித்த போது, பயணித்த படகில் 32 பேர் இருந்ததாகவும் படகு கோளாறு காரணமாக மீண்டும் கரைக்குத் திரும்பியதாகவும் சிலர் அருகில் உள்ள காட்டில் தங்கியிருக்கலாம் அல்லது தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கரை திரும்பிய நபர்களை அழைத்துச் செல்ல வென்னப்புவ பகுதியில் இருந்து வந்த 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கண்டேனர் வாகனம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமகாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(அத தெரண - தமிழ்)