ஞாயிறு, 28 அக்டோபர், 2012

புகலிடக் கோரிக்கையாளர்களாக முன்னாள் போராளிகள் வருகின்றனர்: அவுஸ்திரேலியா.

இலங்கை யுத்தத்துடன் தொடர்புடைய போராளிகள், தற்போது புகலிடக் கோரிக்கையாளர்களாக அவுஸ்திரேலியாவுக்கு வருகின்றனர். இவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பொருளாதார ரீதியில் உதவி வருகின்றனர் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு இவ்வருடம் புகலிடக் கோரிக்கையாளர்களாகச் சென்ற முன்னாள் போராளிகள் அறுவர் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் அறுவர் அந்நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அதிகாரிகளினால் மேலம் ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் மீனவர்களைத் தாக்கிவிட்டு மீன்பிடிப் படகொன்றில் புகலிடக் கோரிக்கையாளர்களாக தப்பி வந்த 14பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவர்களால் தாக்கப்பட்டு கடலுக்குள் வீசப்பட்டதாகக் கூறப்படும் மீனவர்கள் பலியாகியிருக்கலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் போராளிகள் தொடர்பில் இலங்கை, அவுஸ்திரேலியாவுக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்புடன் செயற்படுவதாக அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் அட்மிரல் திஸச சமரசிங்க தெரிவித்தார்.