வியாழன், 3 மார்ச், 2016

மக்களுக்காக உறுதியுடன் உழைத்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே - டாக்டர் சுப்பிரமணிய சர்மா

கொண்ட கொள்கையில் இற்றைவரை உறுதியாக நின்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் சிறந்த தமிழ்த் தலைவராக விளங்குபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என டாக்டர் சுப்ரமணிய சர்மா தெரிவித்துள்ளார்.
 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வடமராட்சி வடக்கு பொலிகண்டியில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலுக்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில் தான் வகுத்துக்கொண்ட கொள்கையில் இற்றைவரை இம்மியளவும் தளராமலும் மனம் சோராமலும் உறுதியாக நின்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் சிறந்த தமிழ்த் தலைவராக விளங்குபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே.
 
அதுமட்டுமன்றி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தவரும் வருகின்றவருமாக இவரே திகழ்கின்றார்.
 
ஆனால் தேர்தல் காலத்தில் வழங்கும் வாக்குறுதிகளுக்கு மாறாக எதனையும் செய்யாது வெறும் வாய்ப்பேச்சோடு மட்டும் நின்றுவிடும் அரசியல்வாதிகளும் எம்மத்தியிலேயே இருக்கின்றார்கள். அவர்கள் எப்போதும் தமது சுயலாபத்தையே முன்னிறுத்தி செயற்படுவதையே தமது கொள்கையாக முன்னெடுத்து வருகின்றனர்.
 
இதனால் நாம் ஏமாற்றப்படும் சந்தர்ப்பங்களே அதிகமாக இருக்கின்றமையானது எமக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றது. இவர்களுக்கு மத்தியில் தனிச்சிறப்பு வாய்ந்தவராகத் திகழ்ந்துவரும் டக்ளஸ் தேவானந்தா கிடைக்கப் பெற்ற சந்தர்ப்பங்களையெல்லாம் எமக்காக உரிய முறையில் பயன்படுத்தி எமது வாழ்வாதாரத்தையும் பொருளா தாரத்தையும் மேம்படுத்துவதில் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு வந்துள்ளார்.

அதுமட்டுமன்றி மக்களுக்கான அவரது சேவைகள் இற்றைவரை தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றன. அதனடிப்படையில்தான் இன்றைய தினமும் எமக்காக இப்பகுதிக்கு வருகைதந்து எமது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளைக் கேட்டறிந்து கெர்ளவது மட்டுமன்றி அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்துகின்றமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.
 
இந்நிலையில் எதிர்காலங்களில் நாம் சரியான அரசியல் தலைமைகளைத் தெரிவு செய்வதின் ஊடாகவே எமக்கான பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
 
இம்மக்கள் சந்திப்பில் மக்களின் தேவைப்பாடுகள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.