திங்கள், 4 ஏப்ரல், 2016

"முஸ்லிம் பெண்களின் திருமண வயதை நிர்ணயிப்பது கடினம்" : சந்திராணி பண்டார தெரிவிப்பு

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் குறைந்த வயதில் திருமணம் செய்து வைக்கப்படுவதை தடுப்பது மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சால் மட்டுமே இயலாது என அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
 
18 வயதுக்குட்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பில் அந்த சமூகத்திலிருந்தே எதிர்ப்புகள் வருகின்றன என்று அவர் கூறுகிறார்.

இது மதம் சார்ந்த விஷயம் என்பதால் முஸ்லிம் தரப்பினருடன் பேசிய பின்னரே தீர்மானத்திற்கு வர முடியும் எனவும் அமைச்சர் சந்திராணி சொல்கிறார்.
 
முஸ்லிம் அமைச்சர்கள், சமூகப் பிரதிநிதிகள், நீதி அமைச்சு என பல்தரப்புடன் கலந்துரையாடிய பின்னரே, தன்னால் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என அவர் கூறுகிறார்.
 
தானும் ஒரு தாய் என்ற வகையில், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இலங்கையின் பொதுசட்டங்களின் அடிப்படையில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணம் செய்வது சட்டவிரோதமாகும்.
 
ஆனால் மத அடிப்படையில் முஸ்லிம் சமூகத்திற்கு இச்சட்டம் பொருந்தாததாக இருக்கிறது.
 
முஸ்லிம் பெண்களுக்கு 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்வதை மதப் பிரச்சினையாக பார்க்காமல், சிறுவர் நலன் மற்றும் சமூகப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும் என, புதிய அரசியல் சாசனக் குழுவினர் முன்னர் ஆலோசனை வைக்கப்பட்டுள்ளது.