திங்கள், 8 ஜூன், 2020

முன்னாள் ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ மாபெரும் விருட்சம்

சிலர் உலகில் பல சாதனைகளை படைப்பர்.ஆனால் அதிலும் ஒரு சிலருக்கே பெயரும் புகழும் கிடைக்கின்றன.அந்தப் புகழும் காலப்போக்கில் மங்கி விடும்.ஆனால் கோடியில் ஒருவருக்கே அந்த மங்காப் புகழும் பெருமையும் வாழும் போதே கிடைக்கின்றன.அந்த அதீத புருஷர் வரிசையில் இலங்கைத் திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ முன்னிலை வகிக்கிறார்.

மகிந்த ராஜபக்ஷ 1945 ம் ஆண்டு நவம்பர் 18ம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெட்டிய பிரதேசத்தில் பிறந்தார்.இவர் பௌத்த உயர் குடும்பத்தில் பிறந்தார்.இவரது இயற்பெயர் பேர்சி மகேந்திரா ராஜபக்ஷ ஆகும்.தந்தை டி. ஏ. ராஜபக்ஷ 1947ம் ஆண்டு முதல் 1965 வரை பெலியத்த பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினராகத் திகழ்ந்தார்.எனவே மகிந்தவுக்கு சிறு வயதில் இருந்தே அரசியல் பின்னணியும் அறிவூட்டலும் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

“தேசத்தின் உண்மையான விடுதலை அதை பெற்றுத் தந்த பெருமை மனிதரை வாழ வைத்த பெருமை நாட்டை அபிவிருத்தி செய்த பெருமை வெளிநாடுகளுக்கு அடிபணியாத பெருமை – வணங்காமுடி “

5வது நிறைவேற்று ஜனாதிபதியும் சமகால பிரதமருமான மகிந்த ராஜபக்ஷவின் ஆளுமை இந்த சில வரிகளுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. இதனையும் தாண்டி இன்னும் பல பெருமைகளையும் சாதனைகளையும் படைத்தவர் அவர்.எவராலும் முடிக்க முடியாததை முடித்தவர் மகிந்த. எவராலும் முடிக்க முடியாத யுத்தத்தை முடித்தார் என்பது இந்த நாட்டிற்கு கிடைத்த அதிர்ஷ்டம் மற்றும் ஆசீர்வாதம்.

ஆரம்ப வாழ்வும் கல்வியும்:

மகிந்த ராஜபக்ஷ காலி ரிச்மண்ட் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு நாளந்தா கல்லூரியிலும் தேர்ஸ்டன் கல்லூரியிலும் கல்வி கற்றார். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1977 நவம்பரில் சட்டஅறிஞர் ஆனார். தங்காலையில் இவர் சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.

குடும்பம்:

1983 இல் மகிந்த ராஜபக்ஷ சிராந்தி விக்கிரமசிங்கவைத் திருமணம் புரிந்தார். சிராந்தி சிறுவர்-உளவியலாளரும், கல்வியாளரும் ஆவார். சிராந்தியின் தந்தை இலங்கைக் கடற்படையின் இளைப்பாறிய அதிகாரி ஆவார். இவர்களுக்கு நாமல், யோசித்த, ரோகித்த என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். நாமல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். யோசித்த இலங்கைக் கடற்படையில் பணியாற்றியவர்.

மகிந்தவின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷ இலங்கை படைத்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் மகிந்தவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றினார். இன்னும் ஒரு சகோதரர் பசில் ராஜபக்ஷ கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஆவார். மகிந்தவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற சபாநாயகராகப் பணியாற்றினார்.

சாதனை:

30 வருட யுத்தத்தை முடித்தமை ஒரு மாபெரும் சாதனையே. அதன் பின்னர் உடனடியாக வடக்கில் முதல் தடவையாக மாகாண சபைத் தேர்தலை நடத்தியமை மற்றுமொரு சாதனை.

இந்தச் சந்தர்ப்பத்தில் கவிஞர் வாலியின் பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

“எந்த நாடு என்ற கேள்வியில்லை எந்த ஜாதி என்ற பேதமில்லை மனிதர்கள் அன்பின் வழி தேடி இங்கு இயற்கையை வணங்குகிறார் மலை உயர்ந்தது போல் மனம் உயரகண்டு இவர் வாழ்வில் விளக்குகிறார்”

அதீத துணிச்சல்- “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”

எல் ரி ரி ஈ யினருக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்தமையே துணிச்சலின் உச்சத்தைக் காண்பிக்கிறது.2006ம் ஆண்டு ஜூன் 15ம் திகதி அநுராதபுரம் கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் எல் ரி ரி ஈ பயங்கரவாதிகளால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில், அந்த மக்களை பார்வையிட பாதுகாப்புத் தரப்பினரின் அறிவுரையையும் மீறி சென்றமை துணிச்சலைக் காட்டுகிறது.

மேலும் 2006ம் ஆண்டு பயங்கரவாதிகள் கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் வைத்து அந்த வேளையில் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள எத்தனித்த போதும் கூட மனம் தளரவில்லை. தனது சகோதரர் ( தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ) தெய்வாதீனமாக அந்த தாக்குதலில் இருந்து தப்பி வந்த பின்னர் யுத்தத்தை மேலும் தீவிரமாக முன்னெடுக்க தீர்மானித்தமை அசகாய துணிச்சலைக் காண்பிக்கிறது. இப்படியாக பல சந்தர்ப்பங்களைக் குறிப்பிடலாம்.

கௌரவ விருதுகள்:

பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவர்.

மல்வத்தை பீடத்தினால் ஸ்ரீரோகண ஜனரஞ்சக என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கறிஞரான மகிந்த 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசுத் தலைவராகத் தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். 2010 அரசுத் தலைவர் தேர்தலில் இரண்டாம் தடவையாக 2010 ஜனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 சனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.

2015 நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும் இவரது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் இவர் பிரதமராக முடியவில்லை. இதனால் எதிர்க்கட்சியில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது.

பின்னர் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ அமோக வெற்றி பெற்றதனால் ஆட்சி மாறியது.புதிய அரசு கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உருவானது.அந்த அரசாங்கத்தில் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்று இப்போதும் பதவி வகித்து வருகிறார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் சில பகுதிகள் வருமாறு;

கடந்த 50 வருடங்களில் உங்கள் வாழ்க்கையில் சிறந்த மற்றும் சவால்மிக்க நிகழ்வுகள் எவை? கொண்டாடக் கூடிய சில நிகழ்வுள் மற்றும் மறக்க விரும்பும் நிகழ்வுகள்? என்று ஒரு வெளிநாட்டு ஊடகவியலாளர் கேட்ட போது பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

“30 வருடங்கள் முடிவில்லாமல் நீண்டு சென்று கொண்டிருந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தது என்னுடைய சிறந்த வெற்றிக் களிப்பாகும். மீண்டும் ஒருமுறை எங்களுடைய குழந்தைகள் தீவிரவாதத்துக்கு பலியாகாது, மீண்டும் ஒருமுறை காரணமில்லாமல் போரில் ரத்தம் சிந்தாது பாதுகாத்துள்ளேன். 2015 - 2019-க்கு இடைப்பட்ட காலத்தில் என்னை மற்றும் என்னுடன் தொடர்புடையவர்களை நடத்திய விதம் நான் மறக்க விரும்பும் மோசமான மற்றும் வலி நிறைந்த அனுபவம். சுதந்திரத்திற்குப் பிறகான வரலாற்றில் எந்த ஒரு அரசியல் தலைவரும், ஜனநாயக எதிர்கட்சித் தலைவரும் இப்படி ஒரு கொடிய அமைப்பு சார்ந்த தண்டனை அனுபவித்திருப்பார்கள் என்று நம்பவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், எனக்கு ஆதரவாக இருந்த தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் முந்தைய அரசால் கேள்வி கேட்பதற்காக இழுத்துச் செல்லப்பட்டனர்.

சிலர் சிறை வைக்கப்பட்டனர். கடற்படையில் அதிகாரியாக பணியாற்றும் என்னுடைய மகன் யோஷித. அவர் என்னுடைய அரசியலுக்காக எதுவும் செய்தது கிடையாது. அவரும் சிறைவைக்கப்பட்டார். எனக்கு ஆதரவு அளித்த எம்.பிக்கள் அவர்களுடைய கட்சி பதவிகளை இழக்க வேண்டியிருந்தது. கோட்டாபயவும் நேரடியாக குறிவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.

இவை மிகவும் வலிகள் நிறைந்தவை மற்றும் வருத்தமானவை. நான் ஆட்சியில் இருந்த 2005--2015 காலகட்டத்தில் ஜனநாயக எதிர்க்கட்சியாளர்களை ஒருபோதும் தண்டித்தது கிடையாது. துன்புறுத்தியது கிடையாது.

நாங்கள் அதனை செய்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாங்கள் போரில் வெற்றி கொள்வதில் இந்நாட்டை வளர்ச்சியடையச் செய்வதில், விவசாயத்தை வலுப்படுத்துவதில், இலங்கையை சுயசார்பாக்குவதில் பரபரப்பாக இருந்தோம்” என்று தெரிவித்தார். “நீங்கள் தீவிரமான அரசியலில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளீர்கள். சார்க் நாடுகளில் ஒரு நாட்டை வழிநடத்தும் தலைவர்களில் நீங்கள் தான் மிகவும் மூத்த அரசியல் தலைவர். இந்த 50 வருட பொது வாழ்க்கை குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டபொழுது இவ்வாறு பதிலளித்தார்.

“இந்த 50 வருடங்கள் நிச்சயமாக சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருந்தன. இந்த ஒட்டுமொத்த காலங்களில் இடைவேளைகளின் போது மட்டுமே அமைதியாக இருக்க முடிந்தது.

1970-ம் ஆண்டு மே மாதம் நான் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளில் ஜனதா விமுக்தி பெரமுனவின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியால் இலங்கை பெரும் அழிவைச் சந்தித்தது. 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் நான் இலங்கையின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது விடுதலைப் புலிகளை எதிர்கொண்டது மிகப் பெரும் சவாலாக இருந்தது. எங்களால் சவால்களை எதிர்கொண்டு அதைக் கடந்து வர முடிந்தது. திரும்பிப் பார்க்கும் போது என்னால் 50 வருடங்கள் அரசியலில் இருந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய முடிந்துள்ளது. அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

“ஒரு ஜனாதிபதியாக 2005 மற்றும் 2015 கால கட்டத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை, 50 ஆண்டுகளில் நீங்கள் எதிர்கொண்ட விவகாரங்களில் இது மிகவும் கடினமானது என்று கருதுகிறீர்களா?”என்று கேட்ட பொழுது

“அது எந்தத் தலைவருக்கும் மிகவும் கடினமான பணியாக இருந்திருக்கும். இராணுவம். கடற்படை, விமானப் படை, பொலிஸ் துறையின் தலைமையில் சிறந்த அனுபவம் பெற்றிருந்த குழுக்களைப் பெற்றிருந்தேன். படைகளை மேலாண்மை செய்வது என்பது மிகவும் முக்கியமானது. அந்தப் பணிக்கு ஒரே ஒருவரைத்தான் என்னால் நம்ப முடியும் என்பது எனக்குத் தெரியும். அது என்னுடைய இளைய சகோதரர். 2005-ம் ஆண்டு நான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் கோட்டாபயவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்ததுதான் நான் செய்த முதல் நியமனம். இந்தப் போரில் ஈடுபட்ட நம் எல்லோருக்கும் இது மிகப் பெரிய சாதனை. அதைக் கடந்து விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பு என்று எப்.பி.ஐ குறிப்பிட்டது முக்கியமானது.

“2015−2019-ம் ஆண்டுகளில் நீங்கள் ஆட்சியில் இல்லை. அந்த காலங்கள் பற்றி கூறுங்கள் என்று கேட்ட பொழுது”

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு நான் இங்கிருந்து நேரத்தை வீணடிக்கவில்லை. வீரகெட்டியாவிலுள்ள என்னுடைய வீட்டுக்குச் சென்று குடும்பத்துடன் என்னுடைய நேரத்தை செலவு செய்தேன். இருப்பினும் மக்கள் என்னை மீண்டும் வந்து தலைமையேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். நான் சுற்றிப் பார்க்கும்போது, இலங்கையின் அரசியல் தலைமை எவ்வாறெல்லாம் நிந்திக்கப்படுகிறது என்பதைப் பார்த்தேன். அப்போது என்னுடைய பணி இன்னும் முடிவடையவில்லை என்று உணர்ந்து கொண்டேன். இந்த நாட்டின் தந்தையாக அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க வேண்டியது என்னுடைய வேலை, ஆட்சியாளர்களின் செயல்பாடுகளுக்கு அவர்கள் பொறுப்பு என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். மேலும் வருங்கால நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேர்மையாகவும், பொறுப்புணர்வுடனும் இருக்க முன்மாதிரியாக இருந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிராந்திய ஒத்துழைப்பு என்பது முக்கியமானது. இது முற்றிலுமாக அவசியமானது. இதுதான் நம்மை இன்னமும் வலுவாக இருக்கச் செய்கிறது. உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையின் காரணமாக சார்க் அமைப்பு செயல்படாமல் இருக்கலாம். பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் பேச்சுவார்தையை தொடங்குவதற்கான பாதைகளை திறந்தநிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மகிந்த ராஜபக்ஷ உள்ளார்.

சுற்றுலாத்துறை பற்றி:

உலகம் முழுவதும் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருந்தாலும் கடந்த ஆண்டு ஈஸ்டர் நாளின் போது நடந்த தாக்குதலினால் ஏற்கனவே சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருந்தது. அந்த பாதிப்பு இன்னமும் இருக்கிறது. சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் சுற்றுலாத்துறையை சார்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய-இலங்கை உறவு:

இந்தியா−இலங்கை இடையிலான இருநாட்டு உறவில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன. 1980 மற்றும் 2014 ஆண்டுகளில் இருநாட்டு உறவுகள் மோசமடைந்தபோது இரு நாடுகளுமே பாதிக்கப்பட்டன. 1948 மற்றும் 1980-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியா - இலங்கை உறவு சிறப்பானதாக இருந்தது.

இரு நாடுகளுக்கிடையே வலுவான உறவு இருந்த முந்னைய காலத்தை நோக்கி நாடு மீளச் சென்றுள்ளது.அதற்கான அடித்தளத்தை சமகால அரசாங்கங்கள் உருவாக்கியுள்ளன என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தனது வாழ்நாளில் தன்னை அரசியலுக்கு வருவதற்கு ஊக்குவித்தவர் தனது தாயார் என்பதையும் அவருக்கு நன்றியுணர்வோடு இருப்பார் என்பதையும் ஒரு சில சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.

1970-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்து இந்த நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு நன்றியுடன் இருப்பதை அவர் நினைவு கூறியது குறிப்பிடத்தக்கது.

அனைத்து நாடுகளுடனும் இலங்கை அணிசேராக் கொள்கையைப் பின்பற்றுகிறது. இந்தியா மற்றும் சீனா இருவரும் மதிப்புமிக்க நண்பர்கள். ஜவஹர்லால் நேரு மற்றும் சீனாவின் தலைவர் சூ என்லாய் இருவரும் சேர்ந்து இரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்காக பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கினர்.

அந்தக் கொள்கையைத் தான் தாமும் ஏற்றுள்ளதையும் இனிவரும் காலங்களில் அதனைப் பின்பற்றுவதையும் மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

“தோன்றின் புகழோடு தோன்றுக” என்ற வாசகத்திற்கேற்ப தனது கொள்கை மற்றும் துணிச்சல் காரணமாக பல சவால்களை வெற்றி கொண்டு இன்றும் வீறு நடைபோடும் வீரனாக, மக்கள் விரும்பும் நாயகனாக, ஒரு தந்தையாக ஒரு பாதுகாவலனாக, முழு நாட்டிற்கும் ஆசீர்வாதமாக அமைந்த மகிந்த ராஜபக்ஷ அவர்கள் 50 வருட பாராளுமன்ற வாழ்கையை பூர்த்தி செய்தாலும், இன்னும் பல ஆண்டுகள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பமாகும்.




ஜெ.யோகராஜ்
எழுத்தாளர், சுயாதீன ஊடகவியலாளர்